அனைவருக்கும் அருள் வழங்கும் சங்கரநாராயணர்; காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2024 10:08
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும், கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் மூதுரைகள் போதிக்கின்றன. ஆகவே மனித வாழ்வில் திருக்கோயில்கள் இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் இறைவன் சுயம்புவாகவும், தேவர்கள், மகரிஷிகள், அரசகர்கள் முதலியவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், உள்ள சிவ ஷேத்திரங்கள் பல உள்ளன. அவைகளில் தென்னாடுடைய சிவபிரானாக விளங்கி வருபவரும் தானே சிவனாகவும், திருமாலாகவும் ஒருங்கிணைந்த வடிவமாக அகமும், புறமுமாகவும் உண்மை ஸத்யவடிவாகவும் எழுந்தருளி அனைவருக்கும் அருள் வழங்கும் பெருமான் இருப்பது சங்கரநாராயணர் திருக்கோயில் எனும் சங்கரன் கோயிலாகும்.
இக்கோயிலுக்கு நமது காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் மகா சுவாமிகள் 1923ம் ஆண்டு தமது விஜய யாத்திரையின் போது விஜயம் செய்து சுவாமி தரிசனம் செய்தார்கள். மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் இருவரும் நேரில் 5.7.1995ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தை தமது திருக்கரங்களால் செய்தார்கள். அதன் பின்னர் கடந்த 2008ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டார்கள். இவ்வாறு நமது காஞ்சி காமகோடி பீடாதிபதிகளுக்கும், சங்கரநாராயணர் கோயிலுக்கும் பல நூற்றாண்டுகளாக தொடர்பு இருந்து வருவதை அறிய முடிகிறது. இக்கோயில் ரேவதி புண்ய காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையும், அது தொடர்பாக சிறப்பு மலர் வெளியிடும் தினமலர் நாளிதழையும், கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்கள் நலமுடன் வாழ மகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர சுவாமியை பிரார்த்தனை செய்கிறோம். - காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடாதிபதி, காஞ்சிபுரம்