கோகுல வாசா... கோபியர் நேசா... மண்ணளந்த மாயா! ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
பதிவு செய்த நாள்
27
ஆக 2024 10:08
திருப்பூர்; திருப்பூர், பல்லடம், அவிநாசி பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான கிருஷ்ணரும், ராதையரும், கோவில்களில் தென்பட்டனர். அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த குழந்தைகளை சுமந்தபடி, பெற்றோர் கோவில்களில் வழிபட்டனர். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கு, முதன்முறையாக நேற்று கற்கண்டு சாதம் ஊட்டி மகிழ்ந்தனர். ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவிலில், நுாற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு, கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு, பெற்றோர் அழைத்து வந்திருந்தனர். கோடி விநாயகர் மற்றும் குருவாயூரப்ப சுவாமி, நவரத்தின அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள், துளசி மற்றும் தாமரை மலர்களை சாற்றி, வழிபட்டனர்; பக்தர்களுக்கு அவல் பிரசாதம் வழங்கப்பட்டது. புல்லாங்குழலை வாசித்தபடி, குழந்தைகள் கோவிலை சுற்றி வந்து, உற்சாகமாக விளையாடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ராயபுரம் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியான நேற்று, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவமூர்த்தி, சிறப்பு அலங்காரத்துடன், வெண்ணெய்த்தாழியை கையில் தாவிய கோலத்துடன் அருள்பாலித்தார். காலை முதல், ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட பள்ளி மாணவியரின், பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று நடந்தது. பரதநாட்டிய மாணவியர், கிருஷ்ண அவதாரத்தை விளக்கி, பரதநாட்டிய கதை நிகழ்த்தினர். ‘எங்கெங்கு நோக்கினும் கண்ணனே’; திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. காலை, சிறப்பு திருமஞ்சனமும், மாலையில், குழந்தை கிருஷ்ணருக்கு சங்குப்பால் புகட்டும் நிகழ்ச்சியும், ‘எங்கெங்கு நோக்கினும் கண்ணனே’ என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை, உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
|