காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆவணி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கால சந்தி பூஜை, விஸ்வக் சேனர் ஆராதனம், புண்யாவதனம், கலச ஆவாஹனம் ஆகிய வைபவங்கள் நடந்தன. ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, தேன், நெய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால், ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு அரங்கநாத பெருமாள், வெள்ளி சப்பரத்தில், மேள, தாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு, ஆஸ்தானம் எழுந்தருளிய அரங்கநாத பெருமாளுக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உச்ச கால பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.