பதிவு செய்த நாள்
31
ஆக
2024
10:08
திருச்செந்துார்; திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆவணி திருவிழாவில் இன்று சுவாமி சண்முகர் ’பச்சை சாத்தி’ விழாவை முன்னிட்டு பல்வேறு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 6ம் நாள் இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் வெள்ளித்தேரிலும், வள்ளிஅம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி, உள் மாடவீதிகள் மற்றும் ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். திருவிழாவின் ஏழாம் திருநாளை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல் 5:30 மணிக்குள், கடக லக்கனத்தில் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, 8:45 மணியளவில் ஆறுமுகநயினார் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பக்த பெருமக்களுக்கு வாழ்வில் வெற்றியையும் ஏற்றத்தை தரும் ஏற்ற தரிசனம் கொடுத்து, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் சுவாமி சண்முகப்பெருமான் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி சிவன் அம்சத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (31ம் தேதி) அதிகாலை 5:00 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி பிரம்மன் அம்சத்தில் வீதி உலாவும், 10:30 மணிக்கு மேல் பச்சை சாத்தி பல்வேறு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி விஷ்ணு அம்சத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செப்., 2ம் தேதி நடைபெற உள்ளது.