பதிவு செய்த நாள்
05
செப்
2024
10:09
திற்பரப்பு; அத்தம் நாளை (6ம் தேதி) துவங்குகிறது. இதனால் இனி வரும் நாட்களில் ஓண கொண்டாட்டங்கள் களை கட்டும். நாளை ஆவணி மாத அத்தம், ஓண விழாவின் துவக்க நாள். கே ரளா மக்கள் மட்டுமல்ல மலையாள மக்கள் எங்கிருந்தாலும் ஓணம் அவர்களுக்கு தவிர்க்க முடியாத விழா. குமரி மாவட்ட மக்களும் ஜாதி, மத வேறுபாடு இன்றி ஓண விழாவை கொண்டாடுவது வழக்கம். ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாள் தான் ஓண பண்டிகையின் முக்கியமான நாள். ஆனால் ஓண விழா கொ ண்டாட்டங்கள் அத்தம் நாளில் துவங்கும். ஓண விழா கொண்டாட்டங்களில் முக்கியமான பூக்களால் கோலமிடும் அத்தப்பூ, அத்தம் நாள் முதல் துவங்க வேண்டும். ஓண பண்டிகையை மலை
யாள மக்களின் விழாவாக தற்போது கூறி வந்தாலும், பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக, ஓணத்தை எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.
மகாபலி சக்கரவர்த்தி ஆவணி மாத திருவோண நாளில் நாட்டு மக்களை பார்க்க வருவதாக ஓணத்தை தொடர் புபடுத்தி கூறப்படுகிறது. நல்லாட்சி தந்த மன்னர் மீண்டும் தங்களை பார்க்க வரும் சந்தோஷத்தால் அவரின் வருகையை கொண்டாடுவது தான் ஓண கொண்டாட்டங்கள். திருவோண நாளில் மக்கள் புத்தாடை உடுத்தி, ஆனந்தமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவது வழக்கம். மதியம் அறுசுவை உணவும் இடம்பெறும். அத்தம் நாளில் துவங்கி அத்தப்பூ மட்டுமல்ல ஊஞ்சல் விளையாட்டு, பந்து விளையாட்டு என விளையாட்டுகளுக்கும் ஓண கொண்டாட்டங்களில் முக்கிய இடம் உண்டு. காலத்தின் மாற்றம் ஓண கொண்டாட்டங்களிலும் பெரிய மாற்றங்களை உருவாக்கியது. வீடுகளில் தனித்தனியாக அத்தப்பூ கோலமிடுவது குறைந்து வருகிறது. வீடுகளில் ஊஞ்சல் கட்டி ஆடுவதற்கான வசதிகளும் இல்லாமல் போனது. கொண்டாட்டங்களுக்கான வசதி வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், ஓணகொண்டாட்டம் வேறு வழிகளில் அதிகரித்து வருகிறது. ஊர் கூடி கொண்டாட்டங்கள் நடத்துவதும், பள்ளி, கல்லூரிகள் என நிறுவனங்களில் வண்ணமயமான ஓண கொண்டாட்டங்கள் குமரி மாவட்டத்திலும் அதிகரித்து வருகிறது. கேரளா மக்கள் மட்டுமல்ல, குமரி மக்களும் தோவாளையில் சென்று பூக்கள் வாங்கி அத்தப்பூ கோலம் இடுகின்றனர். வருடந்தோறும் தோவாளை பூசந்தையில் ஓண விற்பனை அதிகரித்து வருவது இதற்கு சாட்சி. நாளை அத்தம் துவங்குகிறது. வரும் 15ம் தேதி திருவோணம்.
கல்வி நிறுவனங்களில் இனி வரும் நாட்களில் கொண்டாட்டங்கள் களை கட்டும். தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அத்தப்பூக்கள் மலரும். பல்வேறு பகுதிகளில் இளைஞர் அமைப்புகள் ஓண கொண்டாடத்திற்கான ஏற்பாடுகளை துவக்கி உள்ளனர். மலையாள அமைப்புகள் ஏற்கனவே ஓண நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. ஓண கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஓண மழை ஓடி ஓடி பெய்யும் என கூறுவார்கள். லேசான மழை அங்கும் இங்குமாக பெய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஓண கொண்டாட்டங்களுக்கு சிரமத்தை கொடுக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. காலநிலை ஒத்துழைத்தால் வரும் நாட்களில் குமரியில் ஓண விழா களை கட்டும்.