பதிவு செய்த நாள்
05
செப்
2024
11:09
சென்னை: சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில், தினமும் அன்னதான திட்டம் தொடர்கிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் செயல் அலுவலர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில், 365 நாட்களும் அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக துாய குடிநீர், சமையல் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, அனைவரும் சாப்பிடும் வகையில், உணவு தயாரிக்கப்படுகிறது. ஆக., 30ல், மகேஷ்வர பூஜை அன்னதானக்குழு, இந்து முன்னணி என தங்களை தெரிவித்துக் கொண்ட அமைப்பினர், உரிய முறையில் இல்லாமல், வெளியில் சமைத்த உணவை பக்தர்களுக்கு வழங்க முயன்றனர். அதை கோவில் நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள், கோவில் வாசலின் வெளிச்சுவர் முகப்பு அருகில் வைத்து, மக்களுக்கு பிரசாதங்களை வினியோகித்து சென்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதியே, வெளியில் இருந்து சமைக்கப்பட்ட உணவு வழங்குவதை, இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி, கோவில் நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. பாம்பன் சுவாமி கோவிலில் வழக்கம் போல், தினசரி அன்னதான திட்டம் தொடர்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.