நடுக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் 7 ஆண்டுகளுக்கு பின் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2024 12:09
மரக்காணம்; நடுக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா 7 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழா நடத்தவது தொடர்பாக 7 ஆண்டுகளுக்கு முன் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கோவில் திருவிழாவை நடத்த வருவாய்த் துறையினர் தடை விதித்ததால், 7 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இதனைக் கண்டித்து ஒரு தரப்பினர் கடந்த லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். உடன், அதிகாரிகள் தேர்தலுக்குப்பின், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று கிராம மக்கள் ஓட்டு போட்டனர்.
தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி இருதரப்பு முக்கியஸ்தர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால், திருவிழா நடத்த விதிக்கப்பட்ட தடையை வருவாய்த் துறையினர் நீக்கினர். அதனையொட்டி, திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.