பதிவு செய்த நாள்
20
நவ
2012
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று தேராட்டம் நடந்தது. கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றமும் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, சுப்பிரமணியசுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் சட்டத் தேரில் எழுந்தருளினார். விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. கோயில் திருவாட்சி மண்டபத்தில் திருக்கண்ணில் சுவாமி எழுருளினார். மாலை 4 மணிக்கு மூலவருக்கு தைல காப்பு சாத்துப்படியாகி 108 படியில் தயாரான தயிர் சாதம் மரத்தொட்டியில் படைக்கப்பட்டது. அதன் மீது பல்வேறு உணவு வகைகள் வைத்து பாவாடை நைவேதன தரிசனம் நடந்தது. கார்த்திகை கொடியேற்றம்: முன்னதாக கார்த்திக்கை தீபத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கோயிலில் நேற்று காலை தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். 12 செம்புகளில் புனிதநீர் வைத்து பூஜைகள் முடிந்து சிவாச்சார்யார்கள் கார்த்திகை திருவிழா கொடியேற்றினர். நவ., 27வரை விழாவையொட்டி, தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருள்வர். நவ., 24ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 26ல் பட்டாபிஷேகம், 27ல் காலையில் தேரோட்டம், மாலையில் மலை மீது மகா தீபமும், தொடர்ந்து, 16கால் மண்டபம் அருகில் சொக்கப்பான் தீபக் காட்சியும் நடக்கும். 28ல் தீர்த்த உற்சவம் நடக்கும்.