பதிவு செய்த நாள்
09
செப்
2024
05:09
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் அதிகாலை விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. துடியலூரில் ஹிந்து முன்னணி, பா.ஜ., மற்றும் பொதுமக்கள் சார்பில் மகாராஜா விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அரவான் திடலில் உள்ள சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இங்கு ஹிந்து முன்னணி சார்பில் சிங்க விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கம்மாள் காலனியில் வரம் தரும் வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமி விவேகானந்தர் ஆன்மிக பேரவை மற்றும் பொதுமக்கள் சார்பில், மாப்பிள்ளை விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் ஹிந்து முன்னணி சார்பில், ராஜஸ்தானி அரண்மனை போல செட் அமைக்கப்பட்டு, அதில் அன்னமயில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்டத் தலைவர் ரமேஷ், வாராஹி மணிகண்ட சுவாமிகள் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர். நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. கேஸ் கம்பெனி அருகே உள்ள லட்சுமி கணபதி கோவிலில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல ஜோதிபுரம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, மத்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன.