பதிவு செய்த நாள்
10
செப்
2024
12:09
திருவள்ளூர் ; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் முழுதும், 950 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலை அமைத்த ஐந்து நாட்களுக்குள் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இதற்காக, 15 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் வீடுகளில் வைத்திருந்த சிலைகளை, அருகில் விநாயகர் சிலை அமைக்கப்பட்ட இடத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில், இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று, மாவட்ட நிர்வாகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. திருவள்ளூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 30 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் மற்றும் வீடுகளில் வழிபாடு நடத்திய சிறிய விநாயகர் சிலைகள் அனைத்தும், நேற்று மாலை, பெரியகுப்பத்தில் இருந்து, ஜே.என்.சாலை, தேரடி வழியாக காக்களூர் ஏரிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின், ஏரியில், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த, 10க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பேண்டு வாத்தியங்கள் முழங்க, வண்ண பொடிகள் துாவி, இளைஞர்களின் ஆட்டம் பாட்டம் ஆரவாரத்திற்கு இடையே டிராக்டர் மற்றும் லாரிகளில் விநாயகர் ஊர்வலமாக சென்றார். நேற்று, எளாவூர் கால்வாயில் 44 சிலைகள், பழவேற்காடு ஏரியில், 16 சிலைகள், கிராம பகுதி நீர்நிலைகளில், 39 சிலைகள் கரைக்கப்பட்டன. திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில், விநாயகர் சதுர்த்தி ஒட்டி கடந்த, 7 ம் தேதி, 300க்கும் மேற்பட்ட இடங்களில், 3 அடி முதல், 6 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் வைத்து விழா குழுவினர் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டனர். நேற்று திருத்தணி நகரத்தில், 30 சிலைகளும் ஒன்றியத்தில், 27 சிலைகளும் என மொத்தம், 57 விநாயகர் சிலைகள் மாட்டு வண்டி, லோடு ஆட்டோ மற்றும் டிராக்டர்கள் மூலம் ஊர்வலமாக பேண்டு வாத்தியத்துடன் பட்டாசுகள் வெடித்தும் ஏரி, குளம் மற்றும் நந்தியாற்றில் சிலைகளை கரைத்தனர். – நமது நிருபர் குழு –