பதிவு செய்த நாள்
13
செப்
2024
11:09
திருப்பூர்; திருப்பூர் வாணிய செட்டியார் சமுதாயம் சார்பில், 72ம் ஆண்டு, ஆவணி மூலப்பிட்டுத்திருவிழா, பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆவணி மூலப்பிட்டுத்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை மூலநட்சத்திர நாளில் நடத்தப்படுகிறது. சிவபக்தியில் சிறந்திருந்த வந்தியம்மை மற்றும் பாண்டிய மன்னனுடன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடலை நினைவு கூரும் வகையில், இவ்விழா கொண்டாடப்படுகிறது. நேற்று, மாலை, 6:00 மணிக்கு, நடராஜருக்கு அபிேஷக ஆராதனையும், இரவு, 7:00 மணிக்கு, பிட்டுக்கு மண் சுமந்த படலம் திருக்காட்சியும், மகாதீபாராதனையும் நடந்தது. வசந்த மண்டபத்தில், குளம் போல் வரப்பு அமைத்து, தண்ணீர் நிரப்பப்பட்டது. சிவாச்சாரியார் ஒருவர், பிட்டுக்கு மண் சுமந்த சிவனை போல் வேடமிட்டு, இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலை போல், மண்வெட்டி, கூடையுடன் வந்து, மண் சுமந்தார். பிறகு, தரையில் படித்து உறங்குவது போல் படுத்திருந்த நபரை, பாண்டிய மன்னன் பிரம்பால் அடிக்கும் படலக்காட்சிகள் நிகழ்த்தப்பட்டது. பக்தர்கள், பிட்டுக்கு மண் சுமந்த படலத்தை பார்த்து, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது.