ஓணம் வந்தல்லோ... திருவோணம் வந்தல்லோ! அத்தப்பூ கோலமிட்டு மகாபலிக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2024 05:09
திருப்பூர்; திருப்பூர் பகுதியில் நேற்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மகாபலி சக்ரவர்த்தி வீடுகளில் மக்களை நேரடியாக வந்து சந்திப்பதாக கருதப்படும் நாள் திருவோணமாக கொண்டாடப்படுகிறது. மகா விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி சக்ரவர்த்தி, இந்த நாளில் வீடுகள் தோறும் சென்று மக்களின் வரவேற்பைப் பெறுவதாக ஐதீகம். ஓணம் பண்டிகையையொட்டி வீடுகளில் அத்தப்பூக் கோலம் போட்டு 10 நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் திருவோணம் நிகழ்வு நடைபெறும். வீடுகளில் பல வகைகாய்கறிகளைக் கொண்டு, பல்வேறு விதமான உணவு பதார்த்தங்கள் படையல் செய்து வழிபாடு நடத்தப்படும்.
ஓணம் பண்டிகையை நேற்று, திருப்பூர் பகுதியில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் வீடுகளில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். வீடுகள் முன் அத்தப்பூக் கோலம் வரைந்து, தீபம் ஏற்றி வைத்து, திருவாதிரை நடனமாடியும் மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்கும் விதமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கேரள பாரம்பரிய ஆடைகளையும், புத்தாடைகளும் அணிந்து பண்டிகை கொண்டாடப்பட்டது. பலரும் ஓணம் பண்டிகைக்கான வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். திருப்பூர் ஐயப்பன் கோவில், குருவாயூரப்பன் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளும் நடந்தது. இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.