பதிவு செய்த நாள்
15
செப்
2024
05:09
பாலமேடு; பாலமேடு அருகே மறவர்பட்டி அருந்ததியர் காலனியில் சித்தி விநாயகர், உச்சி மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை சிறப்பு யாக பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, அம்மன் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.
பேரையூர்: மேலப்பரங்கிரி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நவகிரக யாகம், லட்சுமி யாகம் நடத்தப்பட்டு மகாதீப நிகழ்ச்சி, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், பிரசன்ன கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூரண குதி தீபாரணை நடந்தது. நேற்று காலை 7:35 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்து. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
சோழவந்தான்: தென்கரையில் அகிலாண்டேஸ்வரி சமேத திருமூலநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.,10ல் கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் துவங்கின.13ல் பூஜை,கோ, பூர்ணாஹூதி முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 4ம் கால யாகபூஜையை தொடர்ந்து பட்டர்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க அம்மன், சுவாமி,பரிவார தெய்வங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கினர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவர், ஹிந்து சமய அறநிலையத்துறையினர், ஊழியர்கள் செய்தனர்.
மேலக்கால் அருகே தாராப்பட்டியில் கொடிப்புலி முத்தையா சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று சிறப்பு யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை வெயிலான் வகையறா பங்காளிகள் செய்திருந்தனர்.