சிரிப்பு மனிதனுக்கே உரிய கலை. காளை மாடு பசுமாட்டைப் பார்த்தால் சிரிப்பதில்லை. ஆனால், மனிதனும் மனிதனும் சிரிக்காமல் இருக்க முடியாது. சிரித்து வாழ்பவர்களை நோய் அணுகாது என்பர். சிலருக்கு சிரிக்கவே தெரியாது. சிரித்தால், தங்கள் பெருமை குறைந்துவிடும் என்று எண்ணி வாழைப்பூவைப் போல உம்மென்று மவுனமாக இருப்பர். இவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள். ஒருமுறை கும்பகோணம் அருகிலுள்ள குடவாசல் சிவன்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலில் மீனாட்சியம்மை திருமணம் என்ற தலைப்பில் வாரியார் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவரான அவரது உரையைக் கேட்டு கூட்டத்தினர் வயிறு குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தனர். நடுவில் இருந்த ஒருவர் மட்டும் பொம்மை போல சிரிக்காமல் அமர்ந்திருந்தார். வாரியார் தன் மனதிற்குள், இவர் முதல் தடவையாக மனிதராகப் பிறந்து இருக்கிறார் போல என்று எண்ணிக் கொண்டார். அவரையும் சிரிக்க வைத்தாக வேண்டுமென்ற உத்வேகத்துடன், நகைச்சுவை துணுக்கு ஒன்றை எடுத்து விட்டார் வாரியார். எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டனர். அதுவரை அமைதியாய் இருந்த மனிதரும் இப்போது சிரித்தார். வந்தது ஆபத்து! அவர் வாயில் புகையிலையை மென்று எச்சிலை அடக்கிக் கொண்டிருந்தார். அந்த தாம்பூல எச்சில் அருகில் இருந்த பலரின் சட்டையில் பட்டு சிவப்பாகி விட்டது. சிரிக்காதவர் அமைதி காத்ததன் காரணம் அப்போது புரிந்தது என்கிறார்.