கரூர் அருகிலுள்ள ஒரு ஊரில் காவடிவிழா நடந்தது. விழாவில் வாரியார் விரிவுரை செய்வதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இரவெல்லாம் ரயிலில் பயணம் செய்து கரூர் வந்து சேர்ந்தார். தான், அன்றாடம் வழிபடும் வயலூர் முருகன் விக்ரஹத்தையும் கொண்டு வந்துஇருந்தார். காலையில் பால், தேன், திரவியங்களால் அபிஷேகம் செய்தார். அப்போது, அவரது கையில் இருந்த சண்முக மந்திரம் பொறித்த மோதிரம் நழுவி கீழே விழுந்துவிட்டது. வாரியாரின் கவனம் முழுவதும் பூஜையில் இருந்ததால், அவர் அதைக் கவனிக்கவில்லை. இரவெல்லாம் பயணம் செய்த களைப்பால் பகலில் தூங்கிவிட்டார். மாலையில் விரிவுரையை தொடங்கினார். கம்பத்திளையனார் காட்சி (திருவண்ணமாலை முருகன்)பற்றி ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார். கையில் மோதிரம் இல்லாதது அப்போது தான் அவருக்கு தெரிந்தது. இருந்தாலும், அதை பெரிதுபடுத்தாமல் சொற்பொழிவை முடித்தார். கூட்டம் முடிந்ததும், அனைவரும் வாரியாரிடம் திருநீறு வாங்க நின்றனர். அதில் ஒருவர் காணாமல் போன மோதிரத்தை கொடுக்க வந்தார். அதைப் பார்த்த வாரியார் ஆச்சரியத்துடன், இது உங்களிடம் எப்படி வந்தது? என்று கேட்டார். சுவாமி! பேசும்போது விரலை உற்றுப் பார்த்தீர்கள்! நானும் அதைக் கவனித்தேன். மோதிரம் காணாமல் போனதை அறிந்துகொண்டேன். காலையில் அபிஷேகத்தின் போது நழுவி விழுந்திருக்கும் என்று ஊகித்தேன். அபிஷேக தண்ணீரை எங்கே விட்டார்கள் என்று கேட்டு, அந்த இடத்தில் தேடிப்பார்த்தேன். நந்தவனப் பூச்செடிகளுக்கு நடுவில் இந்த மோதிரம் இருந்தது என்று பதில் அளித்தார். அவருடைய நல்ல பண்பையும், புத்திசாலித் தனத்தையும் வியந்து வாரியார் பாராட்டினார்.