காசியாத்திரை சென்று வந்த பின், வாரியார் இலவசமாகவே விரிவுரை நிகழ்த்தி வந்தார். வந்தவாசி அருகிலுள்ள பொன்னூரில் இரண்டு நாள் விரிவுரை நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டு வந்திருந்தார். இரண்டு நாளும் மாலை ஏழு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11மணிக்கு முடிந்தது. கடுமையான கோடைகாலம் அது. வெயிலில் வந்த அவருக்கு விழாக்குழுவினர் எவ்வித உபசரிப்பும் செய்யவில்லை. உணவும், உறக்கமும் இல்லாமல் அவதிப்பட்டார். ஆனால், நிகழ்ச்சிக்காக வசூல்செய்த பணத்தை சிலர் வேண்டாத செலவு செய்ததைக் கண்டார். அன்றுமுதல் தன்னுடைய திட்டத்தில் மாறுதல் செய்து கொண்டார். பொருள் வாங்காமல் விரிவுரை செய்தால் நம்மைச் சரியாக நடத்தாமலும், வீண்செலவு செய்தும் அவலநிலையில் விடுகின்றனர். இன்று முதல் நம்மை அழைப்பவர்களிடம் பொருளை வாங்கி, அதை தனக்கென எடுத்துக் கொள்ளாமல் அறப்பணிகளுக்கு தர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இந்த முடிவினால் பல நற்பணிகள் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது என்று அவர் குறிப்பிடுகிறார்.