வாரியார் புஷ்பராகக்கல் வைத்த கடுக்கன் (கம்மல்) அணிந்திருந்தார். தினமும் சிறிது எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவருடைய வழக்கம். ஒருமுறை விரிவுரைக்காக கொடுமுடியில் (ஈரோடு மாவட்டம்) இருக்கும் அன்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். காதிலிருந்த கடுக்கனைக் கழற்றி விபூதிப்பையில் வைத்துக் கொண்டார். காவிரியில் நீராட அவருக்கு துணையாக ஒரு சிறுவனை அனுப்பி வைத்தனர். அவனிடம் விபூதிப்பையைக் கொடுத்துவிட்டு, காவிரியில் நீராடி கமண்டலத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வழிபாட்டின் போது திருநீறு அணிய விபூதிப்பையை எடுத்தார். அதில் கடுக்கன் இல்லாமல் இருந்ததைக் கண்டார். அருகில் இருந்த ஒருவர், அவரிடம் நடந்த விஷயம் அனைத்தையும் விசாரித்து அறிந்து கொண்டார். சிறுவனை அழைத்து வந்து, கன்னத்தில் அறைந்து உண்மையை வரவழைத்தார். பையன் எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. இந்த நிகழ்ச்சியால் அவருடைய உள்ளம் வருந்தியது. அன்று முதல் கடுக்கன் அணிவதையே விட்டு விட்டார்.