பதிவு செய்த நாள்
16
செப்
2024
01:09
மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே கோலாகலமாக நடைபெற்ற முத்து மாரியம்மன் உட்பட 9 கோவில்களின் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அசிங்காடு கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் எழுந்தருளியுள்ள அம்பிகையை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கானோர் குலதெய்வமாக வழிபாடு செய்து வருகின்றனர். இதுபோல கிராமத்தில் விநாயகர், முருகன், மகாலிங்க சுவாமி, பிடாரி அம்மன், மன்மத சுவாமி, மண்ணடி வீரன், பேச்சியம்மன், நவகிரகத்திற்கு என தனித்தனி கோவில்கள் அமைந்துள்ளன. இந்த 9 கோவில்களில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை ஒரு சேர கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் மற்றும் 14ஆம் தேதி முதல் காலை யாகசாலை பூஜைகளும் தொடங்கியது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு வளர்பிறை, திரியோதசி சிரவிஷ்ட நட்சத்திரம், சித்தயோகம் கூடிய 9 மணி முதல் 10:30 மணிக்குள் துலா லக்னத்தில் விநாயகர், முருகன், மகாலிங்க சுவாமி, பிடாரி அம்மன், மன்மத சுவாமி, மண்ணடி வீரன், நவகிரகம், பேச்சியம்மன் கோவில்கள், இறுதியாக முத்து மாரியம்மன் கோவில் விமான கலசங்களுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தை சர்வ சாதகம் கோபால சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.