அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கும், சிவகாமி அம்மையாருக்கும், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி பூஜையில், பதினாறு வகையான திரவங்களில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அனைத்து கோவில்களிலும் தினந்தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெறுவது போல ஒரு ஆண்டுக்கு ஆறு கால பூஜைகளை நடராஜருக்கு தேவர்கள் நடத்துகின்றனர். அவ்வகையில் சித்திரை மாதம் திருவோணம் உச்சிக்காலம் அபிஷேகம், ஆனி உத்திரம் பிரதோஷ காலம் அபிஷேகம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி மாலைச் சந்தி அபிஷேகம், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி அபிஷேகம், மார்கழி திருவாதிரை திருவனந்தல் அபிஷேகம் மற்றும் மாசி வளர்பிறை சதுர்த்தசி காலைச்சந்தி அபிஷேகம் என நட்சத்திரத்தில் மூன்றும், திதியில் மூன்றும் நடராஜர், சிவகாமி அம்மையாருக்கும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதற்காக இன்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடராஜருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.