பதிவு செய்த நாள்
16
செப்
2024
04:09
செஞ்சி; செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு செல்வவிநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள், அம்மச்சாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
இதற்கான விழா கடந்த 13ம் தேதி காலை தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, காப்பு கட்டப்பட்டது. 14ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளும், மாலை முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள் நடந்தது. இன்று அதிகாலை 4:30 மணிக்கு பிம்ப சுத்தி, 6.00 மணிக்கு பரிவார யாக சாலையில் மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடாகி 6.30 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலிலும், 7.00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 7:45 மணிக்கு அம்மச்சார் அம்மனுக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும் 9.20 மணிக்கு மஹாபூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, 9.45 மணிக்கு அம்மச்சார் அம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கொடிமரம், தட்சிணாமூர்த்தி, சாய்பாபா, சிவன், நாகர், மகாவிஷ்ணு, துர்கை, நவகிரகம் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பத்மினி தேவி மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், வழக்கறிஞர் மகேஷ் விஜய், ஊராட்சி தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.