மானாமதுரை; பெரியகோட்டை அருகே தெக்கூர் கிராமத்தில் உள்ள உலகுடையம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தெக்கூர் கிராமத்தில் உள்ள உலகுடையம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த சில மாதங்களாக ரூ.பல லட்சம் செலவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்து பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 3 நாள்களுக்கு முன்பு யாக சாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கி 4 கால யாகசாலை பூஜைகள் இன்று காலை பூர்ணாஹூதி முடிந்தவுடன் புனித நீர் அடங்கிய கடங்களை தெக்கூர் முத்துவடுகநாதர்,மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் கோபுரங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றது. அன்னதானமும் நடந்தது. மாலை கோயில் வளாகத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,உலக நன்மைக்காகவும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை தெக்கூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.