பழநி ஈசான சிவாச்சாரியார் ஒருமுறை வாரியாரிடம்,டால்ஸ்டாய் எழுதிய நாம் செய்வது என்ன? என்ற புத்தகத்தை நீ ஒருமுறை படிக்கவேண்டும் என்று கூறினார். அப்புத்தகத்தை படித்தால் கண்ணீர் பெருகும் என்றும் கூறினார். வாரியாரும் அப்புத்தகத்தை வாங்கி ஆழ்ந்து படித்தார். மீண்டும் மீண்டும் அசை போட்டார். பொன், பொருள், உலகம் போன்ற பொருட்பற்றை அறவே குறைக்க வேண்டும் என்பதே அந்த புத்தகத்தின் சாரம். அதுமுதல், தங்க ருத்ராட்சம், கவுரிசங்கர் என்னும் தங்கமாலை ஆகியவற்றின் மீது வெறுப்பு கொண்டார். 1954ல் வடமாநில யாத்திரை புறப்பட்டார். அப்போது அணிந்திருந்த அத்தனை தங்க ஆபரணங்களையும் காங்கேயம் முருகப்பெருமானுக்கு அர்ப்பணித்து விட்டார். காசியாத்திரை செல்பவர்கள் காய், கனி, இலை இவைகளில் ஒன்றொன்று விட்டுவிடுவது வழக்கம். வாரியாரோ தங்கத்தைப் பயன்படுத்துவதை விட்டுவிட முடிவெடுத்தார். கங்கையில் நீராடும் போது பொன்னும் பொருளும் வேண்டாம் என்று சங்கல்பமும் எடுத்துக் கொண்டார். அதன்பின், தனது விரிவுரைக்காக, நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்கள் தரும் சன்மானத்தையும் திருப்பிக் கொடுக்க துவங்கினார்.