பதிவு செய்த நாள்
17
செப்
2024
12:09
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆவணி மாத மகாபிஷேகம் நடந்தது.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின்போது ஆயிரங்கால் மண்டப முகப்பிலும், பிற மாதங்களில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடக்கிறது. ஆவணி மாத மகாபிஷேகம் நேற்று இரவு நடந்தது. நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி அம்பாள் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் எழுந்தருள செய்யப்பட்டு, இரவு 7:30 மணி முதல் 11:00 வரை மகாபிஷேகம் நடந்தது. சிவகாமசுந்தரி அம்பாள், நடராஜருக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மதியம் கோவில் கிழக்கு கோபுரம் வாயில் அருகே பொது தீட்சிதர்கள் மகா ருத்ரா ஹோமம் நடத்தினர்.