பதிவு செய்த நாள்
17
செப்
2024
04:09
கோவை; மிலாடி நபி பண்டிகையையொட்டி, உக்கடம் பகுதிகளில் நபிகள் நாயகம் புகழ் பாடி இஸ்லாமியர் ஊர்வலம் சென்றனர். ஏழை, எளிய மக்களுக்கு உணவும் வழங்கினர்.
இஸ்லாமியரின் இறை துாதராக போற்றப்படும், முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாடி நபி விழாவாக கொண்டாடுகின்றனர். விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்வு நடந்து வருகின்றது. கோட்டைமேடு பகுதியில் மட்டன் பிரியாணி தயாரித்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டது. தவிர, ஜி.எம்.நகர், பள்ளி வீதி பகுதியில், சுன்னத் ஜமாத் யூத் பெடரேஷன்(எஸ்.ஒய்.எப்.,) மற்றும் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில், 9வது ஆண்டாக தப்ரூக் உணவு வழங்கப்பட்டது. கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பின் தலைவர் ராஷிதுல் உலமா மவுலவி முஹம்மது அலி இம்தாதி தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள, இர்ஷாதுல் முஸ்லிமின் ஷாபிய்யா சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பில், அரபி பாடசாலை மாணவ, மாணவிகள் புத்தாடை அணிந்து, நபிகள் நாயகம் புகழ் பாடி, ஊர்வலமாக சென்றனர். கோவை தெற்கு உக்கடம், மவுலானா முஹம்மது அலி மார்க்கெட் சார்பில், 81வது ஆண்டு மிலாடி நபி விழா கொண்டாடப்பட்டது. அப்போது, ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, சங்க தலைவர் நுார்முகம்மது வழங்கினார். தொடர்ந்து, பொது மக்களுக்கு மட்டன் பிரியாணி, குஸ்கா வழங்கப்பட்டது.