பதிவு செய்த நாள்
17
செப்
2024
05:09
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உருமாண்டம்பாளையம் பொன்விழா நகர் ஓம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இங்கு ஓம் சக்தி விநாயகர் கோவிலில் அருள்மிகு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுகிறார். திருக்கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு அரசடி விநாயகர் கோவில், ஏக மண்டபம், முன் மண்டபம் அமைத்து திருக்கோவில் வளாகம் முழுவதும் புதிதாக வர்ணங்கள் பூசி, திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கும்பாபிஷேக விழா திருநெறிய தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சான்றோர்கள் முன்னிலையில் வழிபாடு, அனுமதி பெறுதல், ஐம்பூத வழிபாடு, நிலத்தேவர், மூத்த பிள்ளையார் வழிபாடு, புற்று மண் எடுத்து காப்பணிதல், திருக்குடங்கள் வேள்வி, வாயில் காவலர் வழிபாடு, விமான கலசம் நிறுவுதல், 108 வகையான காய்கனி, கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள் படைத்து சிறப்பு பூஜைகள், பேரொளி வெளிப்பாடு, மலர் வழிபாடு, மூலமூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்துதல், தீர்த்த குடங்கள் ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி எல்லை மாகாளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வருதல், திருக்குடங்கள் கோவிலை சுற்றி வலம் வரச்செய்து கும்பாபிஷேகம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடந்தது. தொடர்ந்து, அபிஷேகம், பூஜை, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.