பதிவு செய்த நாள்
18
செப்
2024
05:09
கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கோயில் விழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளால் பலகாரம் சுட்டும், கடல் நீரில் விளக்கு எரிய வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் பழமையான கண் காமாட்சி அம்மன் கோயில் விழா செப்.10ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று மாலை 4:00 மணிக்கு மங்களேஸ்வரி நகர் கடற்கரையில் உள்ள கண் காமாட்சி அம்மன் கோயில் அருகே கடற்கரையில் 7 ஊற்றுகள் தோண்டப்பட்டு அவற்றில் நேர்த்திக்கடன் பக்தர்கள் புனித நீராடினர். கைகளில் அள்ளிக் கொண்டு சென்ற கடல் நீரைக் கொண்டு கண்காமாட்சி அம்மன் கோயிலில் கடல் நீரை ஊற்றி திரி வைத்து விளக்கேற்றினர். அந்த விளக்குகள் மூன்று நிமிடங்கள் எரிந்தன. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4:00 மணிக்கு 10 லி., நெய் ஊற்றப்பட்ட வடை சட்டியில் பச்சரிசி, வெல்லம் கலந்த பலகாரம் சுடப்பட்டது. பக்தர் முருகச்செல்வம் 32, கொதிக்கும் நெய்யில் வெறுங்கையால் உள்ளே விட்டு இரண்டு முறை பலகாரத்தை எடுத்து சட்டியில் வைத்தார். அந்த பலகாரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மூலவர் கண்காமாட்சி அம்மன், சிட்டாரம்மன், லாட சன்னியாசி, கருப்பண்ணசாமி, நந்திகேஸ்வரருக்கு பசும்பால், வெல்லம், வாழைப்பழம் நைவேத்தியமாக படைக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவ்விழா இன்று நடந்தது.