புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2024 05:09
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.