கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில், காரமடை அரங்கநாதர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு புரட்டாசி மாதம், கடந்த செவ்வாய் கிழமை துவங்கியது. இந்த மாதத்தில் வரும், ஐந்து சனிக்கிழமைகளில், அரங்கநாதர் கோவிலில் விழாக்கள் நடைபெறும். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா சிறப்பாக நடை பெற்று வருகிறது. கோவில் நடை திறந்து மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. சனிக்கிழமை விரதம் இருக்கும் பக்தர்கள், அரங்கநாதர் கோவிலுக்கு வந்து, பெருமாளை வழிபட்டு, தாசர்களுக்கு உணவு பொருட்களை படையலிடுவர். பின்பு தாசர்கள் கொடுக்கும் அரிசி, காய்கறிகளை வாங்கிச் சென்று, வீட்டில் பொங்கலிட்டு வழிபாடு செய்து, விரதத்தை முடிப்பர். வருகிற, 28ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை விழாவும், அக்டோபர் இரண்டாம் தேதி மஹாளய அமாவாசையும் நடைபெற உள்ளது. நாலாம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, அறங்காவலர் குழுத் தலைவர் தேவ் ஆனந்த் மற்றும் அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவஹர், குணசேகரன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.