பதிவு செய்த நாள்
21
செப்
2024
09:09
உடுமலை; உடுமலை அருகே, வனப்பகுதியிலுள்ள ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
உடுமலை அருகே, ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், ஆயிரம் ஆண்டு பழமையான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும், புரட்டாசி சனிக்கிழமைகளில் மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்தும், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஏழுமலையானை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். வனத்துறை சார்பில், ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதம் துவங்கி, முதல் சனிக்கிழமையான இன்று, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து, பக்தர்களுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழித்தடங்கள் சரி செய்யப்பட்டதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மழை காலத்தில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், வன விலங்குகள் நடமாட்டம் கண்காணிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வனப்பகுதியில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வனச்சூழல் காக்க பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். அடிவாரத்திலிருந்து, கோவில் வரை, வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என, நுாறு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.