பதிவு செய்த நாள்
24
செப்
2024
10:09
கிரகங்களிலேயே செவ்வாய்க்கு தெய்வத்தன்மை அதிகம். சிவனின் அம்சமான வீரபத்திரரே, செவ்வாய் கிரகமாக உள்ளதாக மச்சபுராணம் கூறுகிறது. செவ்வாய்க்கு அதிபதி முருகன் என்பதால், இது முருகனுக்குரிய கிழமையாக உள்ளது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர்.
‘சிவம்’ என்பதற்கு ‘மங்களம்’ என்பது பொருள். பார்வதிக்கு ‘மங்களாம்பிகை’ எனப் பெயருண்டு. ‘சர்வ மங்கள மாங்கல்யே சிவே’ என்று அம்பிகையின் மங்களத் தன்மையை குறிப்பிடுவர். இவர்களின் பிள்ளையான முருகப்பெருமானும் மங்களத்தன்மை மிக்கவர் என்பதால் மங்களவாரமான செவ்வாய்க்கிழமையில் வழிபடுவது சிறப்பு. நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு ‘மங்களன்’ என்றும் பெயருண்டு.
செவ்வாயன்று சிவன், பார்வதி, முருப்பெருமானை வழிபடுவோரின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். செவ்வாயன்று முருகன், ராகுகாலத்தில் துர்க்கை, காளி,மாரி ஆகியோரை விரும்பி வழிபடுவர். நவக்கிரகத்தில் செவ்வாயை சகோதரகாரகர் என்று குறிப்பிடுவர். இவரை வழிபட்டால் சகோதரர் உறவு பலப்படும். பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர, செவ்வாய்க்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட வேண்டும்.இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட முன்ஜென்ம சாபங்கள் தீரும். அனைவருக்கும் செவ்வாய், முருகன் அருளால் மங்களம் உண்டாகட்டும்..!