பதிவு செய்த நாள்
24
செப்
2024
04:09
சனி தோஷம் இருப்பவர்கள், சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை தரிசனம் செய்து வழிபடுவதை நாம் அறிவோம். இந்த வகையில், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம், பன்னஞ்சேவின் கரடி சாலையில் பன்னஞ்சே மடம் அமைந்துள்ளது. மடாதிபதி ஸ்ரீஸ்ரீ ராகவேந்திரா தீர்த்த சுவாமிகள் நிர்வகிக்கிறார். கோவிலுக்குள் நுழைந்த உடன், ஒரே கருங்கல்லில், 23 அடி உயரம் கொண்ட ஸ்ரீ சனீஸ்வரர் விக்ரஹம், நின்றபடி இருப்பதை காணலாம். காக்கை மீது நின்றபடி அருள்பாலிக்கிறார். பொதுவாக சனீஸ்வரருக்கு மீசை இருப்பதை பார்த்திருப்போம். இங்கு, மீசை கிடையாது. ஆந்திராவின் வாரங்கல்லில் இருந்து, இந்த விக்ரஹம் 14 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டு, நிறுவப்பட்டுள்ளது. அப்போது, ஒரு கோடி எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். 25,000 முறை சனி ஸ்தோத்திரம் ஓதப்பட்டது. கோவிலுக்கு சுவர் கிடையாது. கதவு கிடையாது. இங்கு வரும் பக்தர்கள், எள் இருக்கும் கறுப்புத் துணியை ஹோம குண்டத்தில் போட்டு வேண்டிக் கொள்கின்றனர்.
உலகிலேயே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிக உயரமான சனீஸ்வரர் கோவில் இது தான் என்பது கூடுதல் சிறப்பு. விக்ரஹத்தின் மீது ஏறி, பக்தர்கள் அபிஷேகம் செய்வதற்கு, படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தாமாகவே சுவாமிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர். நாமே நல்லெண்ணெயில் ஆரத்தியும் எடுக்கலாம். பயபக்தியுடன் கும்பிட்டால், சனி தோஷம் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மிகவும் புனித தலமாக இப்பகுதி பக்தர்கள் நம்புவதால், வாரந்தோறும் வருவோர் ஏராளம். அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சனிக்கிழமைகளில் ஐந்து மடங்கு அதிகமான பக்தர்கள் வருவர். அதிகாலை 5:00 மணி முதல் இரவு 9:00 வரை பக்தர்கள் வந்துகொண்டே இருப்பர். அன்றைய தினம் 2 கி.மீ., துாரம் வரை பக்தர்கள் வரிசையில் நின்றிருப்பர். இங்கு வந்து சாமி தரிசனம் செய்தவர்கள், தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறி இருப்பதால், மீண்டும், மீண்டும் வருவது சிறப்பு.
உடுப்பி பஸ் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., துாரத்திலும்; கிருஷ்ண மடத்தில் இருந்து, 2 கி.மீ., துாரத்திலும் உள்ளது. பஸ், டாக்சி, ஆட்டோ வசதி உள்ளது. @@subboxhd@@l ஆண்கள் வேட்டி, சட்டையும்; பெண்கள் சேலை, சுடிதார் அணிந்து வருவது நல்லது. – நமது நிருபர் –