பதிவு செய்த நாள்
21
நவ
2012
11:11
கும்பகோணம்: சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை செல்ல, கும்பகோணத்தில் ஒரே நாளில், 9 ஆயிரம் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், கும்பகோணம் பகுதியிலிருந்து, ஆயிரக்கணக்கானோர் மாலை அணிந்து, பாத யாத்திரையாக சென்று வழிபடுகின்றனர். அந்த வகையில் உலக நன்மைக்காக, 20ம் ஆண்டு பாதயாத்திரையை, திருவலஞ்சுழி கோபாலகிருஷ்ண சுவாமிகள் தலைமையில் பக்தர்கள் செல்கின்றனர். இதையொட்டி, நேற்று முன்தினம் மஞ்சள் உடை அணிந்து மாலை அணிந்து கொண்டனர். அதற்கு முன்தினம் இரவு சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பகோணம், பந்தநல்லூர், திருவிடைமருதூர், பாபநாசம், சுவாமிமலை, வலங்கைமான், குடவாசல், நன்னிலம் பகுதிகளைச் சேர்ந்த, 9 ஆயிரம் பக்தர்கள் திருவலஞ்சுழி சென்று, கோபாலகிருஷ்ண சுவாமிகளிடம் மாலை அணிந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் வரும் டிச., 20ம் தேதி வரை விரதம் இருந்து, சமயபுரம் பாத யாத்திரையாக செல்ல உள்ளனர். தினமும் திருவலஞ்சுழி சமயபுரம் மாரியம்மனுக்கு மஞ்சள் அலங்காரம், லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, மகிஷாசுர மர்த்தினி, அன்னபூரணி, ராஜராஜேஸ்வரி போன்ற பலவித அம்மன் அலங்காரமும், குங்குமம், விபூதி, மலர், காசுகள், காய்கறி அலங்காரம் நடக்கிறது. இதுகுறித்து கோபாலகிருஷ்ண சுவாமிகள் கூறுகையில், ""கடந்த ஆண்டு கும்பகோணத்திலிருந்து, 25 ஆயிரம் பக்தர்கள் சமயபுரத்திற்கு பாத யாத்திரையாக சென்றனர். இந்த ஆண்டு, 30 ஆயிரம் பேர் வரை செல்ல உள்ளனர். வரும், 25ம் தேதி வரை பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்படும், என்றார்.