தாடிக்கொம்பு: சபரிமலை சிறப்பு தரிசன டிக்கெட், இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பணி ஆரம்பித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். இதையடுத்து ஆண்டு தோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பக்தர்கள் நெரிசலை தவிர்க்க, கடந்த ஆண்டு முதல், இணையதளம் மூலம் சிறப்பு தரிசன டிக்கெட் பதியும் வசதியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்படுத்தியது. இதற்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை இணைத்து முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தாண்டும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பணி கார்த்திகை மாதம் துவங்கிய சில நாட்களிலேயே சூடிபிடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல இடங்களிலும் முன்பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு செய்ய இண்டர்நெட் மையத்தினர் கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கின்றனர்.