பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் புறப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2024 10:10
கன்னியாகுமரி ; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாகத் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றன.
திருவிதாங்கூர் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரத்தில் மன்னர் காலத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாளடைவில் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின்னரும் இங்கிருந்து சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் எடுத்துச் செல்லப்பட்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. வரும் நான்காம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதையொட்டி இன்று காலை பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி பவனி புறப்பட்டது. இதற்காக நேற்று சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்த நங்கை விக்கிரகம் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் இன்று பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாகத் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.