பதிவு செய்த நாள்
03
அக்
2024
11:10
காஞ்சிபுரம்; நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது மாலை, பெருமாள் திருவடிகோவில் புறப்பாடு நடந்தது. பெருமாள், தாயார் கோபுர வாசலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, 100 கால் மண்டபத்தில், பெருமாள், தாயார் எழுந்தருளினர். அங்கு ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று காலை பூர்வாங்க சண்டி ஹோமம் நடந்தது. மாலை வாஸ்து சாந்தி நடந்தது. இன்று காலை ரக்க்ஷாபந்தனம், யாகசாலை ஆரம்பமாகிறது. இரவு 7:00 மணிக்கு நவராத்திரி கொலு மண்டபத்தில் காமாட்சியம்மன் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளி அம்மன், நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, பஞ்சமுக விநாயகர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரிய காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் வெள்ளி கவசம் அலங்காரத்தில் அருள்பாலித்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி, திருவள்ளுவர் 2வது குறுக்கு தெரு, அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு ராஜ கணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, தாயுள்ளம் கொண்ட தங்க திருமேனிக்கு பவானி அம்மன் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நாதஸ்வரம் மற்றும் தவில் மங்கல இசை நிகழ்ச்சி நடந்தது.