பதிவு செய்த நாள்
05
அக்
2024
01:10
திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், சந்திரபாபு நாயுடு கூறியதாவது: திருமலை திருப்பதி வனப்பகுதியில் 70 முதல் 80 சதவீதம் வனத்தை அடர்ந்த வனப்பகுதியாக மாற்ற வேண்டும். கோவிலில் வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும். வி.ஐ.பி.,கள் வரும்போது எந்தவித சலசலப்பும் இருக்கக் கூடாது.
பிரசாதம் தரம்; கோவிலில் அலங்காரம் செய்வதற்காக தேவையற்ற செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அரசு சார்பில், பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. பிரசாதம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் எந்த சமரசமும் இல்லை. இவற்றையெல்லாம் பரிசோதிக்க நவீன ஆய்வகங்களை அமைப்போம். பக்தர்களிடம் கருத்துகளை பெற்று முன்னேறுவோம். பிரசாதத்தின் தரத்தை அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.