பதிவு செய்த நாள்
05
அக்
2024
01:10
கோவை; நவராத்திரி உற்சவத்தின் இரண்டாம் நாளில், ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அன்னபூர்னேஸ்வரியை, அன்னையாக பாவித்து வழிபாடு செய்தனர் பக்தர்கள். ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் அமைந்துள்ள, அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நவராத்திரி உற்சவம், நேற்று முன் தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மஹா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மஹாலட்சுமி ஹோமமும், லட்சுமி நரசிம்மர் ஹோமமும் நடந்தது. வேதவிற்பன்னர்கள், வேதபாடசாலையில் பயில்வோர் சூழ சண்டிஹோமம் நடந்தது. நிறைவாக சுவாமி அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்னபூர்னேஸ்வரி அம்பாள் ரிஷபவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலையும், மாலையும் சுவாமி திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் ஹோமங்களிலும், வழிபாடுகளிலும் பங்கேற்றனர்.
உலகை காத்தருளும் அன்னையான சக்தியை, பூஜிப்பதுதான் நவராத்திரியின் நோக்கம். அப்படிப்பட்ட சக்தியை சிறுமியாகவும், மங்கையாகவும், குருவாகவும் தாயாகவும் வணங்கலாம். இரண்டாம் நாளான நேற்று, துர்கை சொரூபமாக வீரத்தின் விளைநிலமாக போற்றி குருவாக வழிபட்டனர். கோவில் வளாகத்திலுள்ள யோக நரசிம்மருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, சுவாமிக்கு மஞ்சள் நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளினார்.
வேதபாடசாலையில் நடந்த லட்சார்ச்சனை; ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில், நேற்று அதிகாலை சங்கல்பம், ஸ்ரீ சக்ர அபிஷேகம் தேவிபாராயணம், சுவாசினி, கன்னிகா பூஜை, மஹாதீபாராதனை,அஸ்டாவாதன சேவையும் தொடர்ந்தது. வேதபாடசாலை பண்டிதர்கள் மற்றும் பயிலுவோர் பங்கேற்ற லட்சார்ச்சனை நடந்தது.அவிநாசி சாலை தண்டுமாரியம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்பாள், கோவைப்புதுார் விசாலாட்சி அம்பாள் கோவில்கள், ராஜவீதி சவுடாம்பிகை அம்மன், பூமார்க்கெட் சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், நேற்று நவராத்திரி இரண்டாம் நாள் உற்சவம் சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.