பதிவு செய்த நாள்
10
அக்
2024
07:10
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பகவான் சத்ய சாய் பாபாவால் கவுரவிக்கப்பட்டார்.
கடந்த 2009 டிசம்பர் மாதம் 3ம் தேதி பகவான் சத்ய சாய் பாபாவின் இருப்பிடமான பிரசாந்தி நிலையத்திற்கு ரத்தன் டாடா, இயக்குனர், அவருடைய உதவியாளர் உள்ளிட்டோர் பகவானின் ஆசிர்வாதம் வேண்டி சென்றிருந்தார். அன்றைய தினம் ஸ்ரீ சத்ய சாய் பல்கலை மாணவர்கள் நாடகம் ஒன்றினை நடத்த முடிவு செய்திருந்தனர். சாய் குல்வன்ட் ஹாலில் நடக்க இருந்த நாடகம் சாய்பாபா உத்தரவின் பேரில் பல்கலை ஆடிடோரியத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அன்று மாலை சாய் பாபா பல்கலை மாணவர்கள் மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோர் நாடகம் நடக்க உள்ள ஆடிட்டோரியத்தில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த பகவான் சத்ய சாய் பாபாவிடம் ரத்தன் டாடா ஆசி பெற்றார். சிறிது நேரத்தில் நாடக கலைஞர்கள் பகவானிடம் ஆசி பெற்று நிகழ்ச்சியை தொடங்கினர். நாடகம் முடிந்த பின்னர் ரத்தன் டாடா மேடைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். பின்னர் வார்டன், பாடகர்கள் உள்ளிட்ட பலரை ரத்தன் டாடாவிடம் பகவான் அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்ததும் ரத்தன் டாடா, ஸ்ரீ சத்ய சாய் பாபா பயணித்த காரில் ஒன்றாக பயணம் செய்தார். அதன்பின்னர் ஸ்ரீசத்ய சாய்பாபா, ரத்தன் டாடா, டாடா சன்ஸ் இயக்குனர் ஆர். கே கிருஷ்ணகுமார், மற்றும் சத்ய சாய் பல்கலை முன்னாள் மாணவரும் டாடாவின் சிறப்பு உதவியாளருமான ஆர் வெங்கட்ராமன் பிரசாந்தி நிலைய பஜன் கோவிலில் நடந்த நிகழ்வில் பார்வையாளர்களை சந்தித்தனர்.
சத்ய சாய்பாபாவின் கனவு திட்டமான வித்யா வாஹினி திட்டத்தை, ரத்தன் டாடா, சாய் குல்வந்த் ஹாலில் உள்ள பாபாவின் மஹா சமாதியில் 2011ம் ஆண்டு ஜூன் 17ல் தொடங்கி வைத்தார். மதியம் சிறப்பு விமானத்தில் இங்கு வந்த ரத்தன் டாடா, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை உறுப்பினர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.