திருப்புல்லாணி; திருப்புல்லாணி, களிமண்குண்டு, தினைக்குளம், பெரியபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் துள்ளு மாவு எனப்படும் பிரசாதம் வழங்கப்படுகிறது. பழங்கால முறைப்படி பாரம்பரியமாக வழங்கப்படும் இவ்வகை பிரசாதம் பிரசித்தி பெற்றதாகும். ஈரமுள்ள பச்சரிசியை உரலில் போட்டு அவற்றை குறிப்பிட்ட அளவு வெல்லம் சேர்த்து நன்கு உலக்கையால் இடித்து அதனை மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும் அதனுடன் சிறிது ஏலக்காய் மணத்திற்காக சேர்க்க வேண்டும். பக்தர்கள் கூறியதாவது: துள்ளுமாவு எனப்படும் பச்சரிசி மாவு பிரசாதம் திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களில் பிரதானமாக அம்மனுக்கு படையல் செய்து நேர்த்திக்கடன் பக்தர்களால் பனை ஓலை கொட்டான்களில் வழங்கப்படுகிறது. முளைப்பாரி காலங்களில் தொடர்ந்து பத்து நாட்கள் விரதம் இருந்தும் நிறைவு நாளில் புதன் கிழமை அன்று அசைவ உணவு சாப்பிடுவது வழக்கம். கொழுக்கட்டை அவித்து அதனுடன் துள்ளுமாவு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பாரம்பரியமாக உரலிலே இடித்து வழங்கப்படுவதால் வீட்டு வளாகங்களில் இது போன்ற மரத்தால் மற்றும் கல் உரல் மற்றும் உலக்கைகள் உள்ளன என்றனர்.