பதிவு செய்த நாள்
10
அக்
2024
08:10
தட்சிணகன்னடா; பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதத்துடன், விதவிதமான பாயசம் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, குக்கே சுப்பிரமணியர் கோவில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: குக்கே சுப்பிரமணியர் கோவிலில், பல ஆண்டுகளாக அன்னதானம் செய்யும் வழக்கம் உள்ளது. கோவிலில் ஆண்டு தோறும் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதான பிரசாதத்தை ஏற்கின்றனர். தற்போது கோவில் நிர்வாகியாக பொறுப்பேற்ற ஜுபின் மொஹபாத்ரா, அன்னதான பிரசாதத்தில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளார். வரும் நாட்களில் பக்தர்களுக்கு விதவிதமான பாயசம் கிடைக்கும். இதற்கு முன் சிறப்பு நாட்களை தவிர, பக்தர்களுக்கு தினமும் ஒரே விதமான பாயசம் வழங்கப்பட்டது. வரும் நாட்களில் அவல், கோதுமை, பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பால், அரிசி, சேமியா, ரவை, சிறுதானியங்கள் பாயசம் என, பல வகையான பாயசங்கள் வினியோகிக்கப்படும். பிரசாத உணவு சுவையான, ஊட்டச்சத்தானதாக இருக்கும் நோக்கில், சாம்பாரில் 16 விதமான காய்கறிகள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிர்வாக அதிகாரி ஜுபின் மொஹபாத்ரா கூறியதாவது: குக்கே சுப்பிரமணியர் கோவிலுக்கு வரும் பக்தர்களுடன், நான் பேசினேன். உணவு சுவையாக உள்ளதாகவும், கூடுதல் காய்கறிகள் சேர்க்க வேண்டும் என, ஆலோசனை கூறினர். சிறார்கள் பாயாசத்தை விரும்புகின்றனர். எனவே பழைய சுவை மாறாமல், விதவிதமான பாயசங்கள் வினியோகிக்கவும், சாம்பாரில் 16 விதமான காய்கறிகள் சேர்க்கவும் முடிவு செய்துள்ளோம். கோவில் உள் வளாகத்தில் நடக்கும் போது, மூத்த குடிமக்கள் வழுக்கி விழும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை தவிர்க்கும் நோக்கில், தரையில் மேட் பொருத்தப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. இவர்களுக்கு தங்கும் வசதி உட்பட, மற்ற வசதிகள் செய்து தரப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடவுளை தரிசனம் செய்த பின், இங்கிருந்து மகிழ்ச்சியாக திரும்ப வேண்டும் என்பது எங்களின் விருப்பமாகும். இவ்வாறு அவர் கூறினார்.