பதிவு செய்த நாள்
12
அக்
2024
10:10
பாலக்காடு; செம்பை வைத்தியநாத பாகவதரின், 50-ம் ஆண்டு நினைவு விழா, வரும், 16ம் தேதி நடக்கிறது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி செம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல இசைக்கலைஞர் வைத்தியநாத பாகவதர். இவரது, 50-வது ஆண்டு நினைவு விழா வரும், 16ம் தேதி பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் அருகே உள்ள பூழிகுன்னு கிருஷ்ணர் கோவில் கலையரங்கில் நடக்கிறது. காலை, 7:30 மணிக்கு கோட்டாயி செம்பை வைத்தியநாத பாகவதரின் மடத்தில் இருந்து எடுத்து வரப்படும் அவரது தம்புரா மற்றும் காந்தளூர் கோவிலிலிருந்து எடுத்து வரப்படும் ஜோதியை வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இசைக்கலைஞர் மண்ணுார் ராஜகுமாரனுன்னியின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் பஞ்சரத்ன கீர்த்தனை பாடுதல் நடக்கிறது. அதன்பின், காலை, 9.30 மணி முதல் முன்னணி இசைக் கலைஞர்களின் இசைக் கச்சேரிகள் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு, நினைவு மாநாட்டை பிரபல இசைக் கலைஞர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, 6:30 மணிக்கு மல்லாடி சகோதரர்களின் இசைக் கச்சேரியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழா நிர்வாகக் குழு உறுப்பினர்களான மண்ணுார் ராஜகுமாரனுன்னி, ஒளப்பமண்ணா ஹரி, நீலகண்டன் நம்பூதிரி, பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.