பதிவு செய்த நாள்
12
அக்
2024
10:10
மதுரை; விஜயதசமியை முன்னிட்டு தினமலர் மாணவர் பதிப்பு சார்பில் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில், அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
இவ்வுலகில் அழியாத செல்வம் கல்விச்செல்வம். அதை தங்கள் குழந்தை செல்வங்களுக்கு முறையாக வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இந்த கடமை உணர்வுடன் விஜயதசமி நாளான இன்று மதுரை மேலமாசிவீதி சிவகங்கை சமஸ்தானத்தின் இம்மையில் நன்மை தருவார் கோயிலில் தினமலர் நாளிதழ் சார்பில் இரண்டாவது ஆண்டாக நடந்த அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சிக்கு குழந்தைகளுடன் பெற்றோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
கோயிலுக்குள் பட்டாம்பூச்சிகள் போல அங்கும், இங்கும் ஓடி விளையாடிய குறும்பு குழந்தைகள் எல்லாம் அரிச்சுவடிக்காக அம்மாக்களின் மடியில் சமர்த்தாக வந்து அமர்ந்து கொண்டனர். பரிசாக தினமலர் வழங்கிய சிலேட்டு, குச்சி, புத்தகத்தை ஆசை ஆசையாய் கையில் எடுத்து அம்மா, அப்பா மாதிரி நானும் எழுதுவேன் என, மழலை மொழியில் கொஞ்சி பேசியதை பார்க்க பரவசமாக இருந்தது. தலைமை அர்ச்சகர் தர்மராஜ்சிவம், சரஸ்வதிதேவிக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்து வேத மந்திரத்துடன் அரிச்சுவடியை ஆரம்பித்தார். அவர் கூறுகையில், கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, இக்குழந்தைகளுக்கு சகல திறமைகளையும் அளித்து அருள்புரிவார். கல்வியில் சிறந்தவர்களாக இவர்கள் வருவார்கள் என்றார். பெற்றோர், குழந்தைகளின் ஆள்காட்டி விரலை பிடித்து தாம்பூல தட்டில் நிரப்பியிருந்த அரிசியில் முதலில் ஓம் அடுத்து அ என எழுதவைத்தனர். பெற்றோர் கூறியதாவது.. இந்த நாளை மறக்க முடியாது. வாழ்வில் நல்லதொரு நிகழ்வை தந்த தினமலர் நாளிதழை வாழ்த்துகிறேன் என்றனர்.