பதிவு செய்த நாள்
13
அக்
2024
10:10
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. தங்க அம்பாரியில் பவனி வந்த சாமுண்டீஸ்வரி தேவி, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கர்நாடகாவில் இம்முறை மைசூரு தசரா விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கு, மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி, மைசூரு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. இம்முறை 414வது தசரா விழாவை, இம்மாதம் 3ம் தேதி கன்னட மூத்த இலக்கியவாதி ஹம்.ப.நாகராஜய்யா துவக்கி வைத்தார். துவக்க நாள் முதல், நேற்று முன்தினம் வரை நகர் முழுதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தசரா விழாவின் பத்தாவது மற்றும் இறுதி நாளான நேற்று விஜயதசமியை ஒட்டி, அரண்மனை வளாகத்தில் இரண்டு ஜோடி வீரர்களின் வஜ்ரமுஷ்டி காலகா எனும் மல்யுத்தம் நடந்தது. ரத்தம் வடியும் வரை ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள வேண்டும். அனைவருக்கும், 20 வினாடிகளில் ரத்தம் வடிந்ததால் போட்டி முடிக்கப்பட்டது. அப்போது, அரண்மனை மீதிருந்து, உடையார் மன்னர் வம்சத்தின் பிரமோதாதேவி, பார்த்துக் கொண்டிருந்தார்.
மன்னர் காலத்து பாரம்பரிய முறைப்படி, உடையார் வம்சத்தின் யதுவீர், பல்லக்கில் பவனி வந்து, வன்னி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்தார். அங்கு, ஒன்பது நாட்களுக்கு முன்பு கட்டப்பட்ட கங்கணம் அவிழ்க்கப்பட்டது. அதன் பின், அரண்மனையின் பலராமா நுழைவுப் பகுதியில் முதல்வர் சித்தராமையா, நந்தி கொடிக்கு பூஜை செய்தார். இதன் மூலம் நாட்டுப்புற கலைகள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆரம்பமானது. மாலை 5:02 மணிக்கு, 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவிக்கு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார்.
அமைச்சர்கள் மஹாதேவப்பா, சிவராஜ் தங்கடகி, கலெக்டர் லட்சுமிகாந்த்ரெட்டி, போலீஸ் கமிஷனர் சீமா லாட்கர் ஆகியோர் மலர் துாவி, தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். அப்போது ஏழு பீரங்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்கி, அம்மனுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அரண்மனையில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் உள்ள பன்னி மண்டபம் வரை ஊர்வலம் நடந்தது. வழிநெடுகிலும் இரு புறங்களிலும் மக்கள் வெள்ளம் போன்று நின்று கொண்டு, சாமுண்டீஸ்வரி தேவியின் அருளைப் பெற்றனர். அடிக்கடி மழை பெய்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் காத்திருந்து ஜம்பு சவாரி ஊர்வலத்தை பார்த்து ரசித்தனர். வீடுகள், உயர்ந்த கட்டடங்கள், மரங்கள் என எங்கு திரும்பினாலும் மக்கள் குவிந்திருந்தனர். பன்னி மண்டப மைதானத்தில், கவர்னர் தாவர்சந்த் கெலாட், போலீசாரின் தீப்பந்த அணிவகுப்பு, சாகசங்களை துவக்கிவைத்தார். ட்ரோன் சாகசம், ராணுவ வீரர்களின் குதிரை, பைக் சாகசம், கேரளாவின் செண்டை மேளம் நிகழ்ச்சிகள் நடந்தன. இத்துடன் பத்து நாட்கள் தசரா விழா அதிகாரப்பூர்வமாக நிறைவுபெற்றது.