பதிவு செய்த நாள்
13
அக்
2024
10:10
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, 30 அடி மகிஷா சூரன் வதம் செய்து பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜோதிநகர் விவேகானந்தா கலை, நற்பணி மன்றம், திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை மற்றும் ஆர்ஷ வித்யா பீடம் சார்பில், நவராத்திரி பெருவிழா கடந்த, 3ம் தேதி துவங்கியது. பரதநாட்டியம், சொற்பொழிவு, பட்டிமன்றம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றுமுன்தினம் காளி ஆட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது.
மகிஷாசூரன் வதம்; நிகழ்வின் இறுதி நிகழ்ச்சியாக, நேற்று மாலை, 5:00 மணிக்கு அம்பாள் மகிஷாசூரனை வதம் செய்ய புறப்படுதல், திருவீதி உலா, கோலாட்டம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 6:00 மணிக்கு, 30 அடி உயர மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. வேலால் சூரனை குத்தி வதம் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதில், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை நான்காவது குருமகா சந்நிதானங்கள் சிரவை ஆதீனம் கவுமாரமடம் ராமானந்த குமர குருபர சுவாமிகள், அவிநாசி ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள், ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் ததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவுமாரமடம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில், ‘தீயவர்கள் அழித்து நல்லவர்களை காக்க வேண்டுமென அன்னை, சரஸ்வதி, பார்வதி, துர்காதேவி, திருமகள் என பல வடிவங்களில் அருள்பாலிக்கிறார். நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பொள்ளாச்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. விழாவின் வாயிலாக, மக்களிடம் உள்ள அச்சங்கள் நீங்க வேண்டும். பல்வேறு நாடுகளில் போர் முழக்கம் ஏற்பட்டு, பல ஆயிரக்கணக்கான மக்கள் அழிந்து கொண்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்து, உலக மக்கள் மற்றும் அனைத்து உயிர்களும் நன்மை பெற வேண்டுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.