பதிவு செய்த நாள்
14
அக்
2024
11:10
மணலிபுதுநகர்; மணலிபுதுநகரில், அய்யா வைகுண்ட தர்மபதி திருத்தேரோட்டம், வெகு விமரிசையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, 4ம் தேதி அதிகாலை, 6:30 மணிக்கு திருநாமக் கொடியுடன், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழா துவங்கியது. அன்றிரவே, அய்யா காளை வாகனத்தில் பதிவலம் வந்தார். விழா நாட்களில் அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பதிவலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, அய்யா திருத்தேர் உற்சவம், நேற்று காலை, 11:30 மணிக்கு நடந்தது. முன்னதாக, காலை பணிவிடை, உகப்படிப்பு நடைபெற்றது. தொடர்ந்து, 36 அடி உயர பிரமாண்ட திருத்தேர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின், பதியில் இருந்து நையாண்டி மேளம், செண்டை மேளம் முழங்க, அய்யா ஊர்வலமாக வந்து திருத்தேரில் எழுந்தருளினார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். ‘அய்யா ஹரஹர சிவசிவ’ கோஷத்துடன், திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து, நிலையை அடைந்தது. மாலை, அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் வருதல் நடந்தது. இரவு, பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பு, பின் இரவில், அய்யா பூ பல்லக்கில் பதிவலம் வருதல், அதிகாலை, அய்யா திருநாமக்கொடி அமர்தல் நிகழ்வுடன், திருவிழா நிறைவுற்றது.