பதிவு செய்த நாள்
15
அக்
2024
05:10
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் நல்லுாரில் அமைந்துள்ள சங்கரா செவிலியர் கல்லுாரி வளாகத்தில் உள்ள முகாமில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.
இந்நிலையில், நவராத்திரி திருவிழாவின் நிறைவையொட்டி 5 கிராமங்களில் உளள பஜனை குழுவைச் சேர்ந்த இசை கலைஞர்களுக்கு மிருதங்கம், ஹார்மோனியம், தாளம், ஜால்ரா, தபேலா உள்ளிட்ட இசைக்கருவிகளை நேற்று வழங்கி ஆசி வழங்கினார். மேலும், காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் நிர்வாகிகளை அழைத்து பாராட்டி அருளாசி வழங்கினார். மேலும், சங்கர மடத்தின் சார்பில் வழங்கப்படும் ருத்ராட்சம், திருவோடு, வில்வம் உள்ளிட்ட அரிய வகை விருட்சங்களை கோவில் வளாகத்தில் நடவு செய்து பராமரிக்குமாறு அருளாசி வழங்கினார். ஏனாத்துாரில் முகாமிட்டிருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். திருப்பதி செல்லும் வழியில் அரக்கோணம், பொன்பாடி, திருத்தணி ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பதி முகாமில் தங்கியுள்ள சுவாமிகள் நேற்று முதல், வழக்கம் போல சந்திரமவுலீசுவரர் பூஜையை தொடர்கிறார் என, காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் தெரிவித்தார்.