மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி (துலா) மாதம் 30 நாட்களும் காவிரி துலாக் கட்டத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகளில் பக்தர்கள் நீராடி பாவங்களை போக்கியதால் அந்த நதிகள் தங்கள் பாவங்களை போக்கிகோள்ள இறைவனை நோக்கி தவமிருந்தனர். அப்போது இறைவன் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினால் உங்கள் பாவங்கள் நீங்கும் என்று அருள்பாலித்தார். ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பதால் இது காசிக்கு இணையான தளமாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ஐப்பசி 1ம் தேதி முதல் நாள் தீர்த்தவாரியும், அமாவாசை தீர்த்தவாரி, ஐப்பசி 30ம் தேதி கடைமுக தீர்த்தவாரி உற்சவமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 29ம் நாட்கள் மட்டுமே வருவதால் 30 நாட்கள் தீர்த்தம் கொடுக்க வேண்டும் என்பதால் இன்று புரட்டாசி 31ம் தேதியே துலா மாத பிறப்பு தீர்த்தவாரி உற்சவம் நடந்ததது. அதனையொட்டி தருமபுரம் ஆதீனத்திற்குசொந்தமான வதானேஸ்வரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில்களில் இருந்து சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி வடக்கு கரையில் மதியம் 1 மணிக்கு எழுந்தருள தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம்கொடுக்க தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் உட்பட திரளான பக்தர்கள் காவிரியில் புனிதநீராடினர். இதில் எம்.எல்.ஏ. ராஜகுமார், ஆதீன பொதுமேலாளர் ரங்கராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இராகு காலம் முடிந்து மதியம் 3.15 மணியளவில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்தநாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி பங்சமூர்த்திகளுடன் காவிரியின் தெற்குகரையில் எழுந்தருள அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்க திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். இதில் சிவபுரம்வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார், பாஜ மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். முக்கிய திருவிழாவாக வரும் நவம்பர் 1ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும், 6ம் தேதி கொடியேற்றமும், 12ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14ம் தேதி திருத்தேரோட்டமும்,15ம் தேதி கடைமுக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஆண்டுதோறும் துலா மாத தீர்த்தவாரி நிகழ்வுகள் தருமபுரம், திருவாவடுதுறை ஆகிய இரு ஆதீனங்களுக்கு சொந்தமான கோவில்களில் இருந்து சுவாமிகள் இரு கரைகளிலும் எழுந்தருள ஒரே நேரத்தில் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இரு வேறு நேரங்களில் தீர்த்தவாரி நடத்தப்பட்டதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.