திருவெண்காடு கோவிலில் ஐப்பசி மாத பிறப்பு தீர்த்தவாரி; பக்தர்கள் நீராடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2024 10:10
மயிலாடுதுறை; திருவெண்காடு வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பிறப்பு தீர்த்தவாரி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் 3 தீர்த்த குளங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவரான அகோரமூர்த்தியும், நவகிரகங்களில் ஒருவரான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் அக்னி, சூரியன் ,சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்த மூன்று தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி, அம்பாள், அகோர மூர்த்தி மற்றும் புதன் பகவானை வழிபட்டால் சத்ரு உபாதைகள் நீங்குவதுடன், புத்திர பாக்கியம் மற்றும் ஞானமும் கிடைக்கப்பெறுவர் எனக் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சுவாமி அம்பாள் தீர்த்தக் கரையில் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அஸ்திரதேவர் 3 தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் மூன்று தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி, அம்பாள், அகோர மூர்த்தி மற்றும் புதன் பகவான் சன்னதிகளில் வழிபாடு நடத்தினர்.