காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் தீப்பாஞ்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோயில் வளாகத்தில், காஞ்சிபுரம் சங்கராபல்கலையின் தமிழ்த் துறை உதவி பேராசிரியர்கள் மு.அன்பழகன்,ந.அப்பாதுரை ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது 500 ஆண்டுகள் பழமையான சதிகல் சிற்பம் மண்ணில் புதையுண்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர்மு.அன்பழகன் கூறியதாவது: சதிக்கல் என்பது போரில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரனின் மனைவி அவனது இறப்பைத் தாங்க முடியாமல் கணவனின் சிதையில் பாய்ந்து இறந்து போகும் நிலையில், அவளின் நினைவாக நடப்படும் கல். இந்நினைவுக் கல்லில் கணவன் மற்றும் மனைவி என, இருவரின் சிற்பமும் இடம் பெறும். இதுபற்றிய தகவல்கள் தொல்காப்பியம் முதற்கொண்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலின் தரைத்தளம் முழுதும் சிமென்டால் சமன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இச்சிற்பத் தொகுதியானது 22 செ.மீ., உயரம்மட்டும் வெளியில்தெரியும்படி இருந்தது. அதை உரியவர்களின் அனுமதியுடன் தோண்டி எடுத்து ஆய்வு செய்தோம். இச்சிற்பம் 12 ஆண்டுகளுக்கு முன், தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் வழிபாட்டிலும் இருந்துள்ளது. கல்வெட்டு எழுத்துக்கள் எதுவும் இல்லாதஇச்சதிக்கல் சிற்பம் 74 செ.மீ உயரமும், 38 செ.மீ., அகலமும் கொண்டது. இச்சிற்பத் தொகுதியில் 42 செ.மீட்டரில் ஒரு வீரனும், 37 செ.மீட்டர் உயரத்தில் அவன் மனைவியும் புடைப்புச் சிற்பமாகஉள்ளனர். வீரனின் இடதுகை அம்பு ஒன்றை உயர்த்திப் பிடித்திருக்க அவனது வலதுகை வில்லின் நாணை இழுத்துப்பிடித்துள்ளது. இரண்டு சிற்பங்களின் பாதங்களும் இடது பக்கம்திருப்பிய நிலையில்உள்ளன. வீரனின் தலையில் உள்ள கொண்டை மேல்நோக்கியும் பெண்ணின் கொண்டை வலதுபக்கமாகவும் உள்ளது. இச்சிற்பத்தொகுதி மிக அதிகமாக மழுங்கி இருப்பதால் அணிகலன்கள் மற்றும் ஆடைகள்பற்றியும் தெளிவாக அறிய முடியவில்லை. வீரனின் வலதுகையினை அவனது மனைவி தன் இடக்கரம் கொண்டு பிடித்திருக்கின்றாள். இப்பெண்ணின் வயிறு கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளது. இச்சதிக்கல்லில் உள்ள பெண் கர்ப்பிணியாக இருக்கும் போது கணவரின்சிதையில் புகுந்து உயிர் நீத்திருக்கலாம் எனவும் இதன் காலம் கி.பி. 15ம் நுாற்றாண்டாக இருக்கலாம் எனவும் தெரியவருகிறது. இவ்வாறு அவர்கூறினார்.