சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ம் தேதி திறந்தது. 17 ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு மூலவருக்கு அபிஷேகம் நடத்தி, நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் துவங்கியது. தினமும் காலையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, மதியம் கலசாபிஷேகம், களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் இரவு, 7:00க்கு படி பூஜை, இரவு 9:00க்கு அத்தாழ பூஜை நடக்கும். இந்நிலையில் ஐப்பசி பூஜைக்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சன்னிதானத்தில் இருந்து சபரி பீடம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இன்று 7 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி மாத பூஜைகள் முடிவடைந்து அக்., 25 இரவு 10:00க்கு நடை அடைக்கப்படும்.